Monday, November 4, 2013

வறுமை மூளைத் திறனைப் பாதிக்கும்: புதிய ஆய்வு முடிவு


வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வுமுடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
முன்னர் வெளியாகியிருந்த தகவல்களின்படி, வறுமைக்கும் தவறான முடிவுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மூல காரணங்கள் சரியாக தெளிவில்லாமல் இருந்தன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குழுவினர், தமது ஆய்வின் ஒருபகுதியாக இந்தியாவில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை வட்டத்தை ஆராய்ந்தனர்.
அறுவடைக்கு முன்னரான காலம், பயிர்ச்செய்கைக்காக கடன் பட்டிருக்கும் விவசாயிகள் அப்போது மிக வறியவர்களாக இருப்பார்கள். அதன்பின்னர் அறுவடைக்குப் பின்னர் ஆனால் வருமானம் எதுவும் கிடைத்திருக்காத காலம், அப்போது வறுமையின் உச்ச கட்டத்தில் அவர்கள் இருப்பார்கள். அதன்பின்னர் பணம் கைக்கு கிடைக்கின்ற காலப்பகுதி. இப்படி மூன்று கால கட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இப்படியாக விவசாயிகளின் வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் அவர்களுக்கு மூளைத்திறனை சோதிக்கும் சோதனைகள் வைக்கப்பட்டன.
அவர்களின் வருமானங்களுக்கு ஏற்ப அவர்களின் மூளைச் செயற்பாடுகள் மாறுபட்டிருந்ததை உறுதிசெய்துள்ளதாக பிரிட்டனின் வோர்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்தி மணி கூறுகிறார்.
கையில் பணம் இருந்த காலப்பகுதியில் நுண்ணறிவுத் திறனை பரீட்சிக்கும் சோதனைகளில் குறித்த விவசாயிகள் கெட்டிக்காரர்களாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போஷாக்கு, சுகாதாரம், உடல்சோர்வு மற்றும் குடும்பப் பொறுப்புகள் போன்ற மற்றக்காரணிகளை இந்த ஆய்வு கணக்கில் எடுக்கவில்லை.

அமெரிக்காவிலும் அதே முடிவு

இந்திய ஆய்வு முடிவுகள் அமெரிக்க ஏழைகளிடத்திலும் ஒப்பிட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளன

இந்திய கரும்பு விவசாயிகளிடத்தில் கண்டறியப்பட்ட இந்த முடிவுகளை அமெரிக்காவிலும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்துபார்த்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆய்வு நடத்தப்பட்டது.
இருதரப்பிடமும் இலகுவான, சிரமமான அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டன.
அங்கும், சாதாரண கேள்விகளின்போது பணக்காரர்களிடத்திலும் ஏழைகளிடத்திலும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை.
ஆனால் சிரமமான கேள்விகளின்போது, அமெரிக்க ஏழைகளின் அறிவுத்திறன் குன்றி இருந்தமையை அவதானித்ததாக மருத்துவர் ஆனந்தி மணி கூறினார்.

முடிவில், வறியவர்களின் மூளைச் செயற்பாடுகளை பெரும்பாலும் பணக்கஷ்டங்கள் பற்றிய கவலைகளும் அழுத்தங்களும் ஆக்கிரமித்துவிடுகின்றன. புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு மூளைச் செயற்பாடுகளில் கொஞ்சம்தான் வாய்ப்பு கிடைக்கிறது.

No comments:

Post a Comment