Monday, April 27, 2015

வறுமையை விரட்ட முயற்சிகள்

வறுமையை விரட்ட முயற்சிகள்
பணக்காரர்கள் வறுமையை விரட்டி விட்டார்கள், ஆனால் தங்களுக்கு மட்டும்தான். என்றாலும், மனிதகுலத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியைத்தான் தழுவியுள்ளன. ஏன்? ஏனென்றால், பொதுவாகப் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துபத்துகளையோ அந்தஸ்தையோ விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. பூர்வ இஸ்ரவேல் நாட்டை ஆண்ட சாலொமோன் ராஜா சொன்னார்: “இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது.”—பிரசங்கி 4:1.
சரி, செல்வாக்கும் சக்தியும் படைத்த ஆட்களால் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்ததா? அதற்கும் சாலொமோன் ராஜா பதில் சொல்கிறார்: “அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை. கோணலானதை நேராக்க இயலாது.” (பிரசங்கி 1:14, 15, பொது மொழிபெயர்ப்பு) நவீனநாளில் எடுக்கப்பட்ட முயற்சிகளைக் கொஞ்சம் அலசி பார்ப்போம், சாலொமோன் ராஜா சொன்னதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
சமத்துவக் கொள்கைகள் —வெறும் ஏட்டுச் சுரைக்காயா?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வர்த்தகத்திலும் தொழில்துறையிலும் கொடிகட்டிப் பறந்த சில நாடுகளில் செல்வம் குவிந்துவிட்டது. இதனால், செல்வாக்குமிக்க சிலர் வறுமையை ஒழித்துக்கட்டுவதைக் குறித்து தீவிரமாக யோசித்தார்கள். அப்படியென்றால், செல்வம் ஒரே இடத்தில் குவிந்துவிடாமல் இருக்க உலகிலுள்ள வளங்களை எல்லாருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க முடியுமா?
சோஷியலிசம் (சமதர்மம்) மூலமாகவோ கம்யூனிஸம்(பொதுவுடைமைக் கொள்கை) மூலமாகவோ இதற்குத் தீர்வு கொண்டுவரலாம் எனச் சிலர் நினைத்தார்கள். அதாவது, உலகிலுள்ள வளங்களையெல்லாம் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஏழை-பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழலாம் என்று நினைத்தார்கள். ஆனால், பணக்காரர்களோ இதைக் கேட்டு முகம் சுளித்தார்கள். என்றாலும் அநேகர், “சமுதாயத்துக்கு உன்னால் முடிந்ததைக் கொடு, உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்” என்ற வாசகத்தை இருகரம் நீட்டி வரவேற்றார்கள். இதனால் சோஷியலிசக் கொள்கையை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளும்... நம் பூமி சொர்க்க பூமியாகும்... என்று பலர் கனவு கண்டார்கள். சில பணக்கார நாடுகள் சோஷியலிசக் கொள்கையின் சில அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டன; “தொட்டில் முதல் சுடுகாடுவரை” தங்கள் குடிமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமே செய்துகொடுக்கும் என வாக்களித்தன. இதனால், உயிர்குடிக்கும்வறுமையைத் தங்கள் நாட்டிலிருந்து துடைத்தழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டன.
என்றாலும், சோஷியலிசக் கொள்கை பிறந்ததற்கான நோக்கம் நிறைவேறவில்லை. ஆம், சுயநலமற்ற ஒரு சமுதாயத்தை அதனால் உருவாக்க முடியவில்லை. குடிமக்கள் தங்களுக்காக உழைக்காமல் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும் என்ற குறிக்கோள் கானல்நீராய்ப் போனது. ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்ட சிலர் மறுத்துவிட்டார்கள். காரணம்? ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தால் சிலர் சோம்பேறிகளாகத்தான் ஆகிறார்கள், உழைக்க மறந்துபோகிறார்கள் என்பதே அவர்களின் வாதம். பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை! “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. . . . இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் [திட்டங்களை, NW] தேடிக்கொண்டார்கள்.”—பிரசங்கி 7:20, 29.
வறுமையை ஒழிக்க அமெரிக்க கனவு மற்றொரு நம்பிக்கை கீற்றாகத் தென்பட்டது! அது என்ன, அமெரிக்க கனவு? யாருக்கெல்லாம் கடினமாக உழைக்க ஆசையோ அவர்களெல்லாம் தங்கள் நாட்டில் சீரும் சிறப்புமாக வாழலாம் என்பதே. அநேக நாடுகள் தங்கள் நாட்டை அமெரிக்காவைப் போல் மாற்றுவதற்கு முயற்சித்தன. அதனால் தங்கள் நாட்டில் மக்களாட்சியை அமல்படுத்தின, அரசாங்க தலையீடு இல்லாமல் தொழில் முனைவதையும், வியாபாரம் செய்வதையும் ஏற்றுக்கொண்டன; இதனால்தான் ஐக்கிய மாகாணங்கள் பணக்கார நாடாக ஆனது என்று அவை கருதின. ஆனால், எல்லா நாட்டிலும் இந்தக் கனவு நனவாகவில்லை. வட அமெரிக்கா வெற்றி அடைந்ததற்குக் காரணம், அதன் அரசியல் பலம் மட்டுமல்ல, அந்த நாட்டில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடந்ததும்தான். மற்ற நாடுகளோடு உள்ள வர்த்தகத் தொடர்பான போக்குவரத்தும் சாதகமாக அமைந்தது. மேலும், பொருளாதார ரீதியில் உலகெங்கும் போட்டா போட்டி இருப்பதால் சில நாடுகள் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டுகின்றன, சில நாடுகள் நொடிந்துபோய் வறுமையில் வாடுகின்றன. அப்படியென்றால், செழிப்பாக இருக்கும் நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவினால் பிரச்சினை தீருமா?
மார்ஷல் திட்டம்—வறுமைக்கு ‘குட்பை’ சொன்னதா?
இரண்டாம் உலக போருக்குப்பின் ஐரோப்பா சின்னாபின்னமானது. பசிபட்டினி அதைப் பயமுறுத்தியது. சோஷியலிசம் எங்கே ஐரோப்பாவைத் தன்வசப்படுத்திவிடுமோ என்று பயந்து அதற்கு உதவ அமெரிக்க அரசு முன்வந்தது. எனவே, சுமார் நான்கு வருடங்களுக்கு அமெரிக்கா எக்கச்சக்கமான பணத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு வாரியிறைத்தது; ஆனால், அதன் திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனையையும் விதித்தது. இதனால் ஐரோப்பா, தொழில் துறையிலும் விவசாயத்திலும் முன்னேறியது. இந்த ஐரோப்பிய மறுசீரமைப்பு திட்டம்தான் மார்ஷல் திட்டம் என்று அழைக்கப்பட்டது. இது வெற்றி அடைந்தது போல் தோன்றியது. மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தது. அதனால், உயிருக்கு உலை வைத்த வறுமை காணாமல் போனது. ஆனால், உலகெங்கும் உள்ள வறுமையைப் போக்க இந்த உத்தி கைகொடுத்ததா?
மார்ஷல் திட்டம் ஐரோப்பாவில் வெற்றி பெற்றதால் ஐ.மா. அரசு உலகிலுள்ள மற்ற ஏழை நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்ட முன்வந்தது. விவசாயம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் முன்னேற உதவியது. இதற்குப் பின்னால் முற்றிலும் சுயநல காரணங்களே இருந்தன, இதை அமெரிக்காவும் ஒத்துக்கொண்டது. மற்ற நாடுகளும் ஏழை நாடுகள்மீது செல்வாக்கு செலுத்த விரும்பியதால் பண உதவி அளிக்க முன்வந்தன. ஆனால், அறுபது வருடங்களுக்குப் பிறகு, அதுவும் மார்ஷல் திட்டத்திற்காகச் செலவழிக்கப்பட்டதைவிட பல மடங்கு பணம் செலவழிக்கப்பட்ட பிறகும், பெரிதாக எந்த முன்னேற்றமும் ஆனபாடில்லை. கிழக்கு ஆசியாவில் இருந்த சில ஏழை நாடுகள் பணக்கார நாடுகளாக ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், பல நாடுகள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. பிள்ளைகளின் இறப்பு விகிதம் குறைந்திருப்பது, அநேகருக்குக் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்திருப்பது தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
வெளிநாட்டு உதவி—கைகொடுத்ததா?
பணக்கார நாடுகளைப் போரின் பாதிப்பிலிருந்து மீட்பதைவிட ஏழை நாடுகளை வறுமையிலிருந்து மீட்பதுதான் குதிரைக்கொம்பாக இருந்தது. ஏன்? ஐரோப்பாவில் தொழில்துறை, வர்த்தகம், போக்குவரத்து ஆகியவை ஏற்கெனவே இருந்தன. ஆட்டங்கண்டிருந்த பொருளாதாரத்தை மட்டுமே சீரமைக்க வேண்டியிருந்தது. ஆனால், ஏழை நாடுகளின் விஷயமே வேறு. வெளிநாட்டு உதவியால் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைக்கப்பட்டாலும், மக்கள் இன்னமும் வறுமையின் கோரப்பிடியில்தான் சிக்கியிருந்தார்கள். ஏனென்றால், அந்த நாடுகள் வியாபாரம், இயற்கை வளங்கள், வர்த்தக போக்குவரத்து போன்ற விஷயங்களில் பின்தங்கியே இருந்தன.
வறுமையும் சரி வறுமையின் பாதிப்பும் சரி, முடிவே இல்லாமல் மக்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, நோயினால் வறுமை வருகிறது, வறுமையினால் நோய் இன்னும் மோசமாகிறது. இதனால் வறுமையும் தீவிரமடைகிறது. இப்படியே ஒரு வட்டத்தைப் போல் சுழன்றுக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து இல்லாத நோஞ்சான் பிள்ளைகள் உடலளவிலும் மனதளவிலும் வலுவின்றி இருக்கிறார்கள்; இவர்கள் பெரியவர்களாகும்போது தங்கள் பிள்ளைகளைக் கவனிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். அதோடு, பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உணவை வாரி வழங்கும்போது, “உதவி” என்ற பெயரில் உபத்திரவம்தான் செய்கிறார்கள். ஏனென்றால், ஏழை நாட்டு விவசாயிகளும் சிறுதொழில் வியாபாரிகளும் தங்கள் பொருள்களை விற்க முடியாமல் முடங்கிவிடுகிறார்கள். இதனால் வறுமை மீண்டும் கோலோச்சுகிறது. அதோடு, ஏழை நாடுகளுக்குப் பண உதவி அளிப்பது இன்னொரு பிரச்சினைக்கும் வித்திடுகிறது; எப்படியென்றால், வெளிநாட்டுப் பணத்தைச் சுரண்டுவது எளிது, இது ஊழலுக்கு வழிவகுக்கிறது, இதனால் மீண்டும் வறுமை தலைதூக்குகிறது. மொத்தத்தில், வெளிநாட்டு உதவி தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. ஏனென்றால், வறுமையின் ஆணிவேரை அதனால் ஒழிக்க முடியவில்லை.
வறுமையின் ஆணிவேர்
தனிமனிதன் தொடங்கி அரசாங்கம் வரை எல்லாருமே சுயநலத்தால் ஆட்டிப்படைக்கப்படும்போது வறுமை வறுத்தெடுப்பதில் ஆச்சரியமே இல்லை! உதாரணத்திற்கு, வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உலகத்திலுள்ள வறுமையைப் போக்க அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், தங்களுக்கு வாக்களித்திருப்பவர்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றன. எனவே, பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் பயிர்களை விற்க ஏழை நாட்டு விவசாயிகளைத் தடை செய்கின்றன. அப்போதுதான், தங்கள் நாட்டு விவசாயிகளால் வியாபாரம் செய்ய முடியும் என நினைக்கின்றன. அதோடு, தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு ஏராளமாக மானியம் வழங்குகின்றன; இதனால், ஏழை நாட்டு விவசாயிகளுடைய பயிர்களைவிட இவர்களுடைய பயிர்கள் சீக்கிரமாக விற்பனை ஆகின்றன.
வறுமைக்குக் காரணம்—சுயநலமே உருவாக இருக்கும் மனிதர்களே! ஆம், மக்களும் சரி அரசாங்கமும் சரி, தங்கள் நலனிலேயே குறியாய் இருக்கிறார்கள். ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்று பைபிள் எழுத்தாளரான சாலொமோன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே?—பிரசங்கி 8:9.
அப்படியென்றால் வறுமையிலிருந்து விமோசனமே இல்லையா? மனிதர்களுடைய சுபாவத்தை எந்த அரசாங்கமாவது மாற்றுமா? (w11-E 06/01)
[பக்கம் 6-ன் பெட்டி]
திருச்சட்டம்—வறுமையின்றி வாழ வழிவகுத்தது
பூர்வ காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா தேவன் அநேக சட்டங்களைக் கொடுத்தார். அந்தச் சட்டங்களைக் கடைப்பிடித்திருந்தால் வறுமை அவர்களை அண்டியிருக்காது. அந்தத் திருச்சட்டத்தின்படி குருத்துவப் பணிகளைச் செய்த லேவி கோத்திரத்தைத் தவிர மற்ற எல்லா கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கும் ஒரு நிலம் சொத்தாகக் கொடுக்கப்பட்டது. இந்தக் குடும்பச் சொத்தை அவர்கள் யாருக்கும் நிரந்திரமாக விற்க முடியாது என்பதால் அது அந்தந்தக் குடும்பத்திடமே இருந்தது. அப்படியே விற்றாலும் 50 வருடங்களுக்கு ஒருமுறை அது மீண்டும் அதன் சொந்தக்காரருக்கோ அல்லது அவருடைய குடும்பத்திற்கோ திருப்பிக் கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 25:10, 23) ஒருவேளை சுகவீனத்தினால், பேரழிவினால், சோம்பேறித்தனத்தினால் ஒருவர் தன் நிலத்தை விற்றிருந்தால், யூபிலி வருடத்தில் அது அவருக்குத் திரும்பக் கிடைத்துவிடும்; அவர் அந்தக் கடனை அடைக்காவிட்டாலும் கிடைத்துவிடும். இந்தச் சட்டத்தைப் பின்பற்றினால் யாரும் பரம்பரை ஏழைகளாக இருக்க மாட்டார்கள்.
திருச்சட்டத்தில் இருந்த மற்றொரு அன்பான ஏற்பாடு: கஷ்டத்தினால் ஒருவர் எக்கச்சக்கமாக கடன் வாங்கியிருந்தால் அதை அடைப்பதற்காகத் தன்னையே அடிமையாக விற்றுவிடலாம். அதில் கிடைக்கும் பணத்தை உடனே வாங்கி தன் கடனை அடைத்துக்கொள்ளலாம். ஏழாம் வருடத்திற்குள் அவரால் தன்னை மீட்டுக்கொள்ள முடியாவிட்டால், அவர் விடுதலை செய்யப்படுவார். மீண்டும் விவசாயம் செய்து பிழைப்பதற்காக விதைகளும், ஆடுமாடுகளும் அவருக்குக் கொடுக்கப்படும். அதோடு, ஒரு ஏழை இஸ்ரவேலனுக்கு மற்றொரு இஸ்ரவேலன் கடன் கொடுத்தால் வட்டி வாங்கக் கூடாது எனத் திருச்சட்டம் தடை விதித்திருந்தது. அதோடு அந்தச் சட்டத்தின்படி, அறுவடை செய்பவர்கள் தங்கள் வயலின் ஓரத்தில் இருப்பவற்றை அறுவடை செய்யக் கூடாது. வறுமையில் வாடுபவர்கள் அவற்றைப் பொறுக்கிக்கொள்வார்கள். இந்தச் சட்டங்களைக் கடைப்பிடித்திருந்தால் இஸ்ரவேல் தேசத்தில் யாருமே ஏழைகளாக இருந்திருக்க மாட்டார்கள்.—உபாகமம் 15:1-14; லேவியராகமம் 23:22.
என்றாலும், இஸ்ரவேலர்களில் சிலர் ஏழைகளாக இருந்தார்கள் என அதன் சரித்திரம் காட்டுகிறது. எப்படி? இஸ்ரவேலர் யெகோவா கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இதன் விளைவாக, மற்ற நாடுகளில் இருந்ததைப் போலவே இஸ்ரவேலிலும் சிலரிடம் நிலபுலன்கள் ஏராளமாக இருந்தன. சிலரோ கொஞ்சநஞ்ச நிலம்கூட இல்லாமல் பரம ஏழைகளாக இருந்தார்கள். ஆக, இஸ்ரவேல் மக்கள் மத்தியில் ஏழைகள் இருந்ததற்குக் காரணம் கடவுளுடைய சட்டத்தைச் சிலர் ஒதுக்கித் தள்ளியதே, தங்கள் சுயநல ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே.—மத்தேயு 22:37-40.

No comments:

Post a Comment